Sunday, 6 December 2015

தமிழைக்காப்போம்

முதல் பரிசு  பெற்ற  கவிதை

மாமதுரை  கவிஞர்  பேரவை  சொல்லில்  உயர்வு  தமிழ்ச்சொல்லே – அதில்  சொருகலாமா  பிறச்சொல்லை  என்ற  தலைப்பில்  மாநில  அளவில்  நடத்திய   கவிதைப் போட்டியில்    பாவலர்  கருமலைத்தமிழாழன்  அவர்களின்  கவிதை  முதற்  பரிசு  பெற்றது.  06 – 12 – 2015  அன்று  மதுரையில்  நடந்த  விழாவில்  மன்றத்  தலைவர்  கவிஞர்  வீரபாண்டித் தென்னவன்  அவர்களும்  மன்றச்  செயலாளர்  குறுங்கவிதை  மன்னன்   கவிஞர்  இரவி    அவர்களும்  கவிபாரதி  விருதளித்துப்  பாராட்டிச்  சிறப்பு  செய்தனர்.
சொல்லில்  உயர்வு  தமிழ்ச்சொல்லே – அதில்
---சொருகலாமா   பிறச்சொல்லை
பாவலர்  கருமலைத்தமிழாழன்

காலையிலே   எழுந்தவுடன்   பல்து   லக்கக்
            ---கனிவாகப்   பிரஷ்பண்ணி ;   தண்ணீ    ராலே
கோலமுகம்   கழுவபேஷ்    வாஷ்   பண்ணி
            ---கொண்டதேநீர்   டீபண்ணி    அருந்து   கின்றோம் !

வேலைக்குச்   செலும்முன்னே    முகம்ம    ழிக்க
            ---ஷேவ்பண்ணி    டிரஸ்பண்ணி    டிபனைப்   பண்ணி
ஓலையிலே   சங்கத்தில்    ஓங்கி    ருந்த
            ---ஒண்டமிழைப்    பண்ணிமொழி    செய்தோம்   இன்று !

வாருங்கள்   எனஅன்பாய்    அழைப்ப   தற்கு
            ---வம்மின்னாம்    தமிழிருக்கக்    கம்மின்    என்போம்
சேருகின்ற    நட்பாலே    நண்ப   னானால்
            --செப்புகின்றோம்   தமிழ்விடுத்துப்    பிரண்டாம்   என்றே !


 பாருக்குள்   மூத்ததாகத்    தனித்தி    யங்கிப்
            ---பலமொழிகள்    பெற்றெடுத்த    தாயோ   இன்று
பேருக்குத்    தமிழரென்றே    இருப்ப   தாலே
            ---பெருமையுடன்    இருந்ததமிழ்    தாழ்ந்த   திங்கே !

மறைமலையாம்    அடிகளொடு    பாவா   ணர்தாம்
            ---மணிப்ப்ரவாள    கலப்பகற்றித்    தந்த   போல
கறைநீக்கத்    தமிங்கிலராம்    வேடம்    விட்டுக்
            ---காத்திடுவோம்    தன்மானத்    தமிழ   ராக !


2 comments:

  1. வாழ்த்துகள்
    தொடர்ந்தும் வெற்றிகள் பெற வாழ்த்துகள்!
    உலகெங்கும் நற்றமிழைப் பேணுவோம்!

    ReplyDelete