Monday, 9 November 2015

கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா
தமிழ்நாடு  அரசின்  தமிழ்  இணையக் கல்விக் கழகமும்,  புதுக்கோட்டை  கணினித் தமிழ்ச்சங்கமும்  இணைந்து  நடத்திய  உலகத் தமிழ்  வலைப்பதிவர்  திருவிழாவை  முன்னிட்டு உலக அளவில் இணையதளம்  வாயிலாக அறிவித்த  கட்டுரை, புதுக்கவிதை,  மரபுக்கவிதைப்  போட்டிகளில்  மரபுக்கவிதைப் போட்டியில்  பரிசு  பெற்ற பாவலர்  கருமலைத்தமிழாழன்  அவர்களுக்கு  11 – 10 – 2015  அன்று  புதுக்கோட்டையில்   அழகப்பா  பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா  அவர்கள்  தலைமையிலும், இந்தியா  விக்கி மீடியா  திட்ட  இயக்குநர் திரு.அ.இரவிசங்கர்  அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற  விழாவில்  தமிழ்  இணையக்  கல்விக்கழக  உதவி இயக்குநர் முனைவர் மா. தமிழ்ப்பரிதி  அவர்கள்  விருதும், பரிசுத்தொகையும்  வழங்கினார்.


                                                           ( பரிசு  பெற்ற  கவிதை )

கனவுகளும்   நனவாகும்
பாவலர் கருமலைத்தமிழாழன்

விசிறியினை    அசைக்காமல்   காற்று   வாரா
            வியர்வையினைச்   சிந்தாமல்    உயர்வு    வாரா
நசிந்தநிலை    மாறுதற்குக்    கடின    மாக
            நாமுழைக்க    முனையாமல்    வறுமை    போகா
பசிக்கின்ற   வயிற்றைப்போல்    இடைவி    டாமல்
            படும்முயற்சி    செய்யாமல்    வெற்றி    சேரா
வசியமாகும்    எல்லாமும்    தன்னம்    பிக்கை
            வளர்த்துநாமும்    துணிவோடு    செயல்கள்    செய்தால் !

எதையும்நாம்    சாதிக்க    முடியும்  என்ற
            எண்ணத்தை    நெஞ்சத்தில்    நிறைத்துக்    கொண்டால்
புதைகுழியின்    சேற்றுக்குள்    விதைத்தால்    கூடப்
            பூத்துவரும்    தாமரைபோல்    எழுவோம்    மேலே
கதைகளிலே    வருவதைப்போல்    நாளும்    நாமும்
            கனவுகளில்    காண்கின்ற    இன்ப    வாழ்வை
உதைபந்து    போலெழுந்தே    சோர்ந்தி   டாமல்
            உழைக்கின்ற   போதெல்லாம்    நனவாய்க்   காண்போம் !

எதுதேவை   எனமனத்தில்   முடிவு   செய்தே
            ஏற்றவழி   அறிவாலே   வகுத்துக்    கொண்டு
மெதுவாகக்    கரங்களிலே    நாமு   ழைத்தால்
            மேன்மையான    வெற்றிவந்து   காலில்    வீழும்
செதுக்குகின்ற    உளியாலே    சிதறும்    கல்லாய்
            செயல்களிலே    தன்னலத்தை   உதறி   விட்டுப்
பொதுநலத்தில்   சமூகத்தை    உயர்த்த    வந்தால்
            பொலிகின்ற   சிற்பம்போல்   புகழும்   சேரும் !


(தமிழன்னை விருதும் பரிசும்  வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர்  அளிக்கிறார் )

எழுக  இன்றே
பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்னையினை   இழிவுசெய்யும்   தமிழா   வீட்டில்
          அருந்தமிழைக்    கொலைசெய்யும்   தமிழா   நாட்டில்
உன்மொழியை    ஏளனமாய்ப்    பேசிப்   பேசி
          உயர்மொழியைத்    தாழ்வுசெய்து    கீழ்மை    யானாய்
முன்னோர்கள்    வழிவழியாய்ப்    பேணிக்    காத்த
          முத்தமிழில்    பிறமொழியின்    மாசைச்    சேர்த்து
விண்வெளியில்    ஓசோனைக்    கெடுத்த    தைப்போல்
          விளைவித்தாய்    ஊறுதனைத்    தூய்மை    நீக்கி !

இறைவனையே    மயங்கவைத்த    மொழிதான்   உன்றன்
          இனியமொழி !   தமிழ்புலவன்    சொல்லுக்    காக
இறைவன்தான்   தூதாகச்    சென்ற   தைப்போல்
          இங்குவேறு    மொழியினிலே    வரலா    றுண்டோ1
குறைசொல்லி    இறைவனுக்கே    ஆகா    தென்று
          குரைக்கின்றார்    பழிக்கின்றார்    தட்டிக்    கேட்டுக்
கறைகழுவ    முயன்றதுண்டா !   சொந்த   நாட்டில்
          கனல்கக்கி   எழுவதற்கும்   தயங்கு   கின்றாய் !

அறிவியலைத்   தமிழ்மொழியில்   கற்ப   தற்கும்
          ஆகாதென்   றுரைக்கின்றார்    ஆமென    கின்றாய்
அறிவியலைத்    தொகைப்பாட்டில்   பத்துப்   பாட்டில்
          அன்றேஉன்   முன்னோர்கள்    சொல்லி   வைத்தும்
அறிவிலியாய்    அதையெடுத்துச்    சொல்வ   தற்கும்
          அறியாமல்   இருக்கின்றாய்!   எடுத்து   ரைக்கும்
அறிஞரையும்   ஏளனமாய்    ஏசு    கின்றாய்
          அறிவுபெறும்    நினைவுமின்றி   உறங்கு   கின்றாய் !
                                        
 வடநாட்டார்    தலைமீது    கல்லை   ஏற்றி
          வானுயர்ந்த    இமயத்தில்   வில்பொ    றித்துக்
கடல்கடந்து   நாடுகளை    வென்றெ    டுத்துக்
          கப்பலிலே    சென்றங்கே    வணிகம்   செய்து
நடனமொடு   கட்டடமாய்    கலையில்   ஓங்கி
          நல்லாட்சி   பண்பாட்டில்   உயர்ந்து   நின்ற
தடந்தோளின்    தமிழாஉன்   பண்டை   மாண்பை
          தரைமீது    நிலைநாட்ட   எழுக    இன்றே !




(  உலகத் தமிழ்  வளர்ச்சி  மன்றமும், தமிழர்  உலகம்  இலக்கியத்  திங்களிதழும்  இணைந்து  நடத்திய  கவிதைப் போட்டியில்     முதல்  பரிசு  பெற்ற  கவிதை.  )