Tuesday, 22 December 2015

Sunday, 20 December 2015

கல்லெழுத்து

கல்லெழுத்து  (கவிதை  நூல் )
ஆசிரியர் பாவலர் கருமலைத்தமிழாழன்
வசந்தா பதிப்பகம், 2-16.  ஆர்.கே. இல்லம்,  முதல் தெரு, புதிய வசந்த நகர்  ஒசூர் -635 109
விலை ரூ. 100 - 00
திறனாய்வு
பாவலர் பொன்குமார்

            மரபில்  தொடங்கிய  கவிதைப் பயணம்  பல்வேறு   மாற்றங்களைக்  கண்டுள்ளது.  பல்வேறு  வடிவங்களைக்  கொண்டுள்ளது. மரபுச்  சிறையிலிருந்து  கவிதையை  விடுவித்து  புதிதில்  ஏற்றிப்  புரியச்  செய்த  நிலை  மாறி  நவீனம்   என்னும்  பெயரில்  புரியாமல் எழுதி வருகின்றனர். இந்நிலையில்  மரபுக் கவிதையையே  புரியும் வண்ணம்  எழுதி  வரும் ஒரு சிலரில்   குறிப்பிடத்தக்கவர் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள்.  தமிழ் சார்ந்த, தமிழ் சமூகம் சார்ந்த  முன்னோடி  இதழ்களில்  தொடர்ந்து  எழுதி வருகிறார்.  அவ்வப்போது  தொகுப்புகளையும்  வெளியிட்டு வருகிறார்.  அண்மையில்  வந்துள்ள  அவரின்  தொகுப்பு  கல்லெழுத்து.
கல் தோன்றிய காலம் தொட்டே  தமிழ்  மொழி  பேசப்பட்டு  வருகிறது.  எழுதப் பட்டு
வருகிறது. மூத்த  மொழி  என்னும்  மரியாதையும்  பெற்றுள்ளது.  தகுதியும் அடைந்துள்ளது. அன்னிய மொழிகள்  மெல்ல  மெல்ல  ஊடுருவி அல்லது  ஊடுருவச்  செய்யப் பட்டு  தமிழின் வளர்ச்சியைத்  தடுப்பதுடன்  அழிக்கவும்  முயன்று வருகிறது.  ஆனால்  தமிழ்  மொழி  எவராலும் எதனாலும்  அழிக்க  முடியாத ஆற்றல் பெற்றது. பழமையானது  எனினும்  புதுமைக்கும்  ஏற்றது.
            ……….பசுந்தமிழைச்  சிறாரிடத்தில்  மறைத்த  போதும்
          எந்நாடும்  போற்றிடவே  கணினிக்  குள்ளும்
                   ஏற்றமுடன்  இணையத்தில்  தலைமை யேற்றும்
          தன்னிறைவாய்ப்   பல்துறையின்  வளங்கள்  பெற்றே
                   தமிழ்மொழியும்   தடைதகர்த்தே  வாழும்  என்றும்
கற்காலம்  தாண்டி  கணினி  காலம்  வந்து  விட்டது.  கடவுள் இல்லாத  இடத்திலும்  கணினி  காட்சி  அளிக்கிறது.  ஆட்சி செய்கிறது. கணினிக்கு  ஏற்ற  மொழியாக   தமிழ்  இருப்பதால்  இணையத்திலும்  தலைமை ஏற்கும்   என்று   பெருமிதப்  பட்டுள்ளார்  கருமலையார்.  தடைதகர்த்தே  வாழும்  என்கிறார்.   எனினும்   காப்போம்  நாம்   என்று   ஒரு  வெண்பா  மூலம் அழைப்பும்  விடுத்துள்ளார்.  தமிழ் மொழி  ஏற்காதவனைத்   தீண்டாதார்  எனத்  தள்ள  வேண்டும்   என்கிறார்.   அன்னிய   மொழிகளைக்  கற்றாலும்   அன்னை  மொழியினைக்  கற்பாய்  என்றும்  அம்மொழியிலேயே  ஆன்றோர்கள்  சாதனைப்   படைத்துள்ளனர்  எனத்தூண்டியுள்ளார்.
           
            தமிழ்  மீதுள்ள  பற்றால்  தமிழ்  நாட்டின்   மேலுள்ள  பக்தியால்  கவிஞர்  ஒரு  புரட்சியையே  செய்துள்ளார்.  இந்தியத்தின்  தேசிய  கீதம்  வங்க  மொழியில்  அமைந்ததாகும்.  அதுவே  நாடெங்கும்  தேசிய  கீதமாக  ஒலித்து  வருகிறது.  கவிஞரோ  தமிழுக்கென்று   தமிழனுக்கென்று  தமிழ் நாட்டுக்கென்று  ஒரு  தேசிய  கீதத்தைத்  தமிழில்  உருவாக்கியுள்ளார்.
                        அகத்திணை  புறத்திணை  வாழ்க்கை   யோடு
                             அருங்களவு   கற்பென்னும்   இல்லறத்   தோடு
                   ஒருத்திக்கு   ஒருவனெனும்   ஒழுக்கத்   தோடு
                             ஒழுகிடும்   பண்பாட்டில்   ஒளிரும்  நாடு
தமிழ்  மக்கள்  பண்பாட்டைப்  பாடியுள்ளார்.  பண்பாட்டைப்  பரப்பியுள்ளார். தமிழனைப்  பெருமைப்  படச்செய்துள்ளார்.  தமிழ்  தேசியக்  கீதம்   தன்னை  தரணியெங்கும்  ஒலிக்கச்  செய்துள்ளார்.

தமிழர்க்கென்று   தனியான  குணங்கள்  உள்ளன.  சிறப்பும் உள்ளன.  ஆனால்  இன்று  தமிழன்  தமிழனாக  இல்லை.  தமிழர்  என்றால்  எப்படி  இருக்க  வேண்டும்  என்ன  என்ன  இருக்க  வேண்டும்  அடுக்கடுக்காக  அடுக்கி  உண்மைத்  தமிழனாய்  உயர  வேண்டும்  என்று  அறிவுறுத்தியுள்ளார்.
            தமிழ் நாட்டின்  உரிமை  காப்போம்  கவிதையில்  மாநிலங்கள்  பிரித்த  போது  இழந்த  செல்வங்களை, விட்டுக்  கொடுத்த   வளங்களைப்  பற்றி  நினைவு கூர்ந்துள்ளார்.  வரலாற்றுப்  பதிவாக  உள்ளது.  மீட்க  மீண்டும்  ஒரு  போராட்டம்  நடத்துவோம்  என்கிறார்.
            தமிழியம்  பேசிய  பாரதி,  பெண்ணியம்  போற்றிய  பாரதிதாசன், பாட்டுக் கோட்டை  கட்டிய  பட்டுக்கோட்டை,  முயற்சிக்கு  வழிகாட்டிய  மு.வ.  என்னும்  முன்னோடிகளை, மூத்தோர்களை  பாடல்  மூலம்  போற்றியுள்ளார்.   அவர்கள்  பெருமையைப்  பேசியுள்ளார். பேசச்  செய்துள்ளார்.
            எங்கும்  ஊழல்  எதிலும்  ஊழல்  என்னும்  நிலை  ஏற்பட்டு  விட்டது.  நாளும்  பொழுதும்  ஊழல்  செய்தே  பிழைப்பை  நடத்தி  வருகின்றனர்.  ஊழலுக்கு  எதிரான  நடவடிக்கைகள்  எடுத்தும்  ஊழல்  செய்பவர்கள்  திருந்த  வில்லை.  ஊழல்  செய்பவர்களின்  முகத்திரையைக்  கிழிப்பதற்கும்  கண்டிப்பதற்கும்  அஞ்சாமல்  எழுவாய்  என்று  ஆவேசமாக ஒரு கவிதை  எழுதியுள்ளார்.
            மனிதர்க்கு  பல  குணங்கள்  உண்டு.  அதிலொன்று  சினம்.  சினம்  மனிதனைச்  சீரழித்து விடும்.  கவிஞரும்  சினம் கூடாது  என்கிறார்.  ஏன்  சினம்  கூடாது  என்றும்  விளக்குகிறார். 
                       
தன்கையால்  தன்னுடற்குக்  கொள்ளி   வைக்கத்
                             தவறான  வழிகாட்டும்   சினத்தை  விட்டுப்
                   புன்னகையை   முகமேந்தி  மென்மைப்  பேச்சில்
                             புரிகின்ற  நற்செயல்தாம்   நம்மைக்  காக்கும்
என்று  விளக்கமளித்து  தன்னையே  கொல்லும்  சினம்  என்கிறார்.  சினத்தை  அடக்கி  சிரிப்பை  வெளிப்படுத்துவோம்.
            இயற்கையும்  எதிரியா   கவிதையில்  சுற்றுச்  சூழல்  குறித்து  எழுதியுள்ளார்.  மழை  நீர்  பாதையில்  மனை  கட்டியதை, ஏரியில்  மாடி  கட்டியதை, காடுகள்  அழித்து  தொழிற்சாலைகள்  அமைத்ததை,  நிலத்தில்  செயற்கை  உரம்  போடுவதைக்  குற்றமாய்க்  காட்டியுள்ளார். இயற்கையைக்  காக்க  அறிவுறுத்தியுள்ளார்.  மழையைச்  சேகரிக்கவும்  ஒரு  கவிதையில்  வழி  காட்டியுள்ளார்.
            அறியாமை  இன்னும்  அகலாவிட்டாலும்  அறிவியல் வளர்ந்து  கொண்டே  உள்ளது.  அறிவியல்  உலகமாய்  ஆகிவிட்டது.  அறிவியலில்  நன்மையும் உண்டு, ஆபத்தும் உண்டு.  அறிவியலின் ஒவ்வொரு  கண்டு  பிடிப்பிலும் இரண்டு பக்கம் உண்டு.  அறிவியலை  ஆக்கத்தின்  வழி ஏற்போம்  என்றும் அறிவியலை  இயற்கையோடு  இயைந்தேற்போம்  என்றும்  தெரிவித்துள்ளார்.
            அணுக்குண்டை  வீழ்த்தும்  ஆயுதம்,  ஏன்  அணுஉலை  வெறி  ஆகிய  கவிதைகள்  மூலம்  உலகம்  அமைதியாக  வாழ  வேண்டும் என்று விரும்பியுள்ளதை  அறிய  முடிகிறது. மனித நேயமே முக்கியம் என்கிறார்.  நாடுகளில்  அமைதி  வேண்டியவர்  வீடுகளில் உறவுகளைப்  பகைக்கலாமா?  விளைத்தன்பைப்  பொழிந்தொன்றாய் வாழ்வோம்  நன்றாய் என்று கூறியுள்ளார். எங்கும்  அமைதியும்  அன்பும்  நிலவ  வேண்டும்  என்பதை  வலியுறுத்தியுள்ளார்.
            மகளிர் தினம்  ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது.  மகளிர்  தினம்  ஏன் கொண்டாடப்பட வேண்டும், எதற்காகக்  கொண்டாடப்பட வேண்டும் என்று பாவலர் கூறிய விதம்  மிகச் சிறப்பாக  உள்ளது
                        உயர்கல்வி  பெண்களெல்லாம்  பெறுவ  தற்கே
                             உறுதியினை  ஏற்பதற்கே   மகளிர்  நாளாம்
                   முயற்சிசெய்து   முன்னேறும்  பெண்க   ளுக்கு
                             முன்நின்று  உதவுதற்கே  மகளிர்  நாளாம்
பாவலர்  கூறிய  பல  காரணங்களில்  இரண்டு  மட்டும்  இங்கு  எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.  ஒவ்வொன்றும்  பின்பற்ற  வேண்டியவையாக  உள்ளன.  பெண்மையைக்  காப்போம்  என்றும் ஒரு கவிதையில்  அறிவுறுத்தியுள்ளார்.  அழைப்பும்  விடுத்துள்ளார்.
           
தாத்தா, பாட்டி,  மகன், மகள்,  தம்பி  என்னும்  உறவுகள்  குறித்தும்  கவிதைகளில்  பதிவு  செய்துள்ளார்.
            கல்லெழுத்து  என்னும்  இத்தொகுப்பைப்  பாவலர்  இல்லெழுத்து,  ஊரெழுத்து,  நாட்டெழுத்து என்று  மூன்று  பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.  நாட்டெழுத்தில்  நாட்டைக்  காப்பதுவே  நம்பேறு, சுதந்திரம்  காத்திடுவோம், உலுத்தரினை விரட்டுதற்கே  உறுதி  ஏற்போம், அந்நியர்  வணிகத்தால்  அனைத்தும்  போகும்  ஆகிய  தலைப்புகளில்  கவிதைகள்  எழுதி  நாட்டின்  மேலுள்ள  பற்றைத்  தெரிவித்ததுடன்  வாசிப்பவரையும்  நாட்டுப் பற்று  செலுத்தத்  தூண்டியுள்ளார்.  இக்  கவிதைகளில் பல தலைவர்களின் பெயர்களைச்   சுட்டிக் காட்டியவர்  காந்தி,  நேரு,  நேதாசி, வ.உ.சி.,  ம.பொசி,  ஆகிய  தலைவர்களையும்  கவிதை  மூலம் புகழ்  பாடியுள்ளார். போற்றியுள்ளார்.
            நெடுங்கவிதைகளிடையே  குறுங்கவிதையாக  ஆங்காங்கே  வெண்பாக்கள்  இடம்  பெற்று  இடத்தை நிரப்பி  இதயத்தையும்  நிறையச்  செய்துள்ளார். அதிலொன்று
                    சொல்லாதே   என்றுனக்குச்   சொல்லிடுவர்   கோழையர்கள்
                   பொல்லாக்   கயமைகளைப்  போயொழிக்க --  நல்லவர்கள்
                   எல்லோரை  ஒன்றிணைத்தே  எத்தர்   முகம்கிழிக்க
                   சொல்க   துணிவாய்நீ  சொல் ! 
 என்பதாகும்.  பாவலரும்  எல்லோரை  ஒன்றிணைத்து  எத்தர்  முகம்  கிழிக்கத்  துணிந்து   சொல்லியதாகவே  கவிதைகள்  உள்ளன.
           
பாவலர்  கருமலைத்தமிழாழன்  பழமையில்  மரபுக்  கவிதையில்  எழுதினாலும்  சம  கால  பிரச்சனைகளைப்  பாடுபொருள்களாகக்  கொண்டிருப்பது  பாராட்டத்தக்கது.  மக்களுக்குப்  புரியும்  வகையிலும்  எழுதி  இருப்பது  வரவேற்கத்  தக்கது.  மரபில்  தமிழையும்  தமிழில்  மரபையும்  வளர்த்து  வருவது  குறிப்பிடத்  தக்கது.  கல்லெழுத்து  என்னும்   தலைப்பிலேயே  அவர்  எழுத்து  நிலையானது, உறுதியானது  என்று  தெரிவித்துள்ளார்.  கல்லெழுத்து  கல்வெட்டு  எழுத்தாகும்  என்னும்  நம்பிக்கை  ஏற்படுகிறது,  அவர்  நல்லெழுத்து தொடர  வாழ்த்துகள்.


           

Wednesday, 16 December 2015

மடியவில்லை மனித நேயம்

மடியவில்லை  மனித  நேயம்

பாவலர் கருமலைத்தமிழாழன்

இருள்படரும்  முன்னிரவு  மனைவி  யோடு
இருசக்கர  வண்டியிலே  சென்ற  போது
தெருமுனையின்  குறுக்கினிலே  ஓடி  வந்து
தேர்க்காலில்   விழுந்தகன்றாய்  நுழைந்த  நாயால்
இருவருமே   நிலைகுலைந்து   கீழே  வீழ
இடைநின்ற   கம்பத்தில்   தலையும்   மோத
பெருகிவந்த   குருதியாலே   மனைவி   மயங்க
பெருத்தவடி   வலியாலே   துடித்தேன்   நானும் !

பார்த்தவர்கள்   பார்த்தபடி   பதைப்பே   யின்றிப்
பாதையிரு   திசைகளிலும்   நடந்து   சென்றார்
ஊர்விழாவில்   வேடிக்கை   பார்ப்ப   தைப்போல்
உற்றுநோக்கி   அவர்வழியே   கடந்து   சென்றார்
யார்இவர்கள்   எனத்தமக்குள்   கேட்டுக்   கொண்டு
யாதொன்றும்   நடவாதது   போல்ம   றைந்தார்
வேர்போன்ற   கணியன்தன்   கேளிர்   சொல்லோ
வெறுஞ்சொல்லாய்   ஆனதென்றே   நொந்து   போனேன்!

எந்திரமாய்   மாறிவிட்ட   வாழ்க்கை    தன்னில்
எல்லோர்க்கும்   அவர்பணியே   தலையாய்   ஆக
முந்தியிங்கே   செழித்திருந்த   காடோ   யின்று
முற்றிலுமாக   மொட்டையாகிப்   போன   போல
சந்ததியை   வாழவைத்த    ஆறோ   யின்று
சாக்கடையாய்   மாறிவிட்ட   தன்மை   யாக
சிந்தனையில்   சிறந்திருந்த   நேய   மின்று
சரழிந்து   போனதுவே   எனக்கு   மைந்தேன் !

                                பெரியவர்கள்   பெண்களென   அத்த   னைப்பேர்
 பெயரளவில்   உச்சுகொட்டி   சென்ற   போது
                                உரியதொரு   பொறுப்பற்றோர்   என்றே   ஏசி
  ஊர்தூற்றும்   இளைஞர்கள்   இருவர்   வந்து
                                தெரியாத   எங்களினை   எடுத்துச்   சென்று
  தேவையெனும்   குருதியையும் கொடுத்தே காத்தார்
                                அரிதாகி   மடியவில்லை   மனித   நேயம்
   ஆங்காங்கு   இருப்பதாலே   உள்ளோம்   நாமும் !