Friday, 4 December 2015

அமுதசுரபி விக்கிரமன்



( முதுபெரும்  எழுத்தாளர்  கலைமாமணி  விக்கிரமன்  அவர்களுக்கு  கவிதாஞ்சலி )
அருந்தமிழாய்  வாழ்வார்  அமுதசுரபி  விக்கிரமன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

எழுதுவது   தவமென்றே   நாளும்  நாளும்
            எழுத்தெண்ணி    எழுதிட்ட   தூய    ஞானி
உழுகின்ற   உழவன்போல்   மக்கள்   நெஞ்சில்
            உயர்கருத்தை    விதைத்திட்ட   எழுத்து   மேதை
விழுந்திட்ட    எழுத்தெல்லாம்    சமுதா   யத்தை
            வீழாமல்    காக்கின்ற    விழுதின்   ஆலம்
                        தொழுகின்ற    எழுத்துகளைத்    தொய்வே   யின்றித்
                                    தொடர்ந்திங்கே    கொட்டிட்ட   அமுதசுரபி !

வாழ்க்கைக்குப்    பொருளொன்றே   குறிக்கோ   ளென்று
            வாழ்கின்ற   பேராசை    மனித  ருக்குள்
வாழ்வதிலும்   பொருளிருக்க    வேண்டு   மென்று
            வாழ்வறத்தில்   வாழ்ந்திட்ட   தூய   செம்மல் !
வாழ்க்கையினைச்   செம்மையாக்கும்    மனித   நேயம்
            வழங்குகின்ற    நெஞ்சினனாய்   சங்க   கால
வாழ்வுநெறி    தம்வாழ்வில்   கடைபி    டித்தே
            வாழ்ந்திட்ட    இலக்கியத்து   இமய   வெற்பு !

வரலாற்றுக்    கதைசொல்லி   வரலா  றாக
            வாழ்ந்திட்ட   கல்கியவர்    அடியை   யொற்றி
வரலாற்றுப்    புதினங்கள்   தொடர்ந்த   ளித்து
            வரலாற்றை   வாழவைத்த    வந்தியத்   தேவன் !
வரலாற்றுச்   சாதனையாய்   ஐம்ப   தாண்டாய்
            வற்றாத   அமுதசுரபி   ஆசா   னாகத்
தரமான   இலக்கியத்தின்    ஏட்டைத்   தந்து
            தமிழர்தம்    மனம்நின்ற   எழுத்து   வேந்தன் !



சொந்தமெல்லாம்   எழுத்தென்றே   துன்பம்   வந்து
            சொந்தமென்றே   அனைத்தபோதும்    துவண்டி   டாமல்
நந்தவனம்   கவியிதழை    மரபுப்   பாட்டின்
            நலிவகலத்   தந்திட்ட   நற்றமிழ்க்   கவிஞன் !
தந்திரங்கள்   பலசெய்து    காசிற்   காகத்
            தம்மெழுத்தை    விபச்சார   மாக்கும்   நாளில்
சிந்தனையைத்    தூண்டிவாழ்வைச்   செம்மை   யாக்கும்
            இலக்கியப்பீடம்   வழங்கிட்ட   எழுத்துப்   பீடம் !

அறுபதிற்கும்    மேற்பட்ட    அருமை   நூல்கள்
            அருந்தமிழின்    அன்னைக்கே    அணியாய்ப்    பூட்டிப்
பெருமையினைத்    தமிழ்க்களித்த    நற்கதை   நம்பி
            பெயர்பெற்ற    சரித்திரத்துக்   கதையின்   செம்மல் !
சிறுகதையின்    சேக்கிழார்   கபிலர்   விருது
            சிறப்பான   கலைமாமணி    எனுப்பட்   டங்கள்
பெருமையுடன்    பெற்றகங்கா   புரிகா  வலனாம்
            பேர்பெற்ற   நந்திபுரத்து   விக்கிர   மன்தான் !

எழுச்சிப்பா   பாரதிக்கே    ஆண்டு   தோறும்
            எட்டயபு   ரத்தினிலே   விழாவெ   டுத்தோன்
எழுத்தாளர்   வாழ்வுயர்த்தும்   சங்கத்   தலைவன்
            எழுத்தாளர்   நலநிதியின்    அருமைக்   காவலன்
ஒழுக்கத்தின்   ஒப்பற்ற   சீலன் !   அன்பால்
            ஒருங்கணைத்து   உதவிட்ட   ஈர  நெஞ்சன்
பழுதுரைக்க    முடியாத   எழுத்துச்   சிற்பி
            பண்தமிழின்   புகழாக   என்றும்   வாழ்வார் !



No comments:

Post a Comment